புதுச்சேரி: யூடியூப் சேனலை பார்த்து ரூ.1.80 லட்சம் மதிப்புள்ள பைக்கை மூகமூடி அணிந்து திருடிய இரண்டு இளைஞர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா ஆதனப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அகஸ்டியன் (20). இவர் சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் எலக்ட்ரிக்கல் உதிரி பாகம் தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். கடந்த 14-ம் தேதி அகஸ்டியன் தனது ரூ.1.80 லட்சம் மதிப்பிலான மோட்டார் பைக்கை கம்பெனியின் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு இரவு பணிக்கு சென்றிருந்தார்.
மறுநாள் காலையில் பைக்கை எடுக்க வந்த போது அது திருடுபோயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அகஸ்டியன் சேதராப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சப் - இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு பைக்கில் முகமூடி அணிந்து வந்த இருவரில் ஒருவர் அகஸ்டியனின் பைக்கை திருடிச் செல்வது பதிவாகியிருந்தது. முகமூடி அணிந்திருந்ததால் பைக் திருட்டில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணமுடியவில்லை.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு போலீஸார் சேதராப்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் விலை உயர்ந்த பைக்கை ஓட்டி வந்த இளைஞரை மடக்கி போலீசார் விசாரனை நடத்தினர். அப்போது அந்த இளைஞர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறவே, அவரை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் திருப்பத்தூரைச் சேர்ந்த பூபதி மகன் சுதாகர் (21) என்பதும், வில்லியனூர் கூடப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் பிரதாப் (22) என்பவர் பைக்கை திருடி அவரிடம் கொடுத்ததும் தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் பிரதாப்பையும் போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
அதில் விலை உயர்ந்த பைக்குகள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட பிரதாப், தன்னுடைய கம்பெனியில் வேலை பார்த்துக்கும் அகஸ்டியன் பைக்கை திருட திட்டமிட்டதும், அதற்காக ஆன்லைனில் ஃப்ரீபையர் கேம்ஸ் மூலம் அறிமுகமான சுகாதாரை துணைக்கு அழைத்துள்ளதும் தெரியவந்தது. மேலும் பைக்கை எவ்வாறு திருடுவது என்பது பற்றி பிரதாப் யூடியூப் சேனலில் பார்த்து தெரிந்து கொண்டுள்ளார்.
அதன்படி பைக்கை திருடி, அதனை திருப்பத்தூர் கொண்டு சென்று சில நாட்கள் வைத்திருக்கும்படி சுதாகரிடம் அகஸ்டின் கூறியுள்ளார். இதற்கிடையில், வெள்ளிக்கிழமை அந்த பைக்கை சுதாகர் புதுச்சேரிக்கு எடுத்து வந்தபோது போலீஸில் சிக்கிக்கொண்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பிரதாப், சுதாகர் இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து ரூ.1.80 லட்சம் மதிப்பிலான பைக்கை பறிமுதல் செய்தனர். பின்னர் சனிக்கிழமை இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.