போலீஸார் கைப்பற்றிய உலோக சுவாமி சிலைகள். 
க்ரைம்

திண்டுக்கல் அருகே பழமையான கோயிலில் சிலைகளை திருடி ரூ.12 கோடிக்கு விற்க முயன்ற கும்பல் கைது: தலைமறைவான 2 பேரை தேடும் போலீஸார்

செய்திப்பிரிவு

மதுரை: திண்டுக்கல் அருகே பழமையான கோயிலில் திருடிய சுவாமி சிலைகளை ரூ.12 கோடிக்கு விற்க முயன்ற கும்பலைச் சேர்ந்த 4 பேரை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் பகுதியில் பழமையான கோயிலில் திருடிய சுவாமி சிலைகளை கும்பல் ஒன்று, ரூ.12 கோடிக்கு விற்க முயல்வதாக தென்மண்டல சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு இயக்குநர் ஜெயந்த்முரளி உத்தரவின் பேரில், கூடுதல் டிஎஸ்பி மலைச்சாமி தலைமையில் ஆய்வாளர் ஷமிம் பானு, எஸ்ஐக்கள் ராஜேஷ், பாண்டிராஜன், சிறப்பு எஸ்ஐக்கள் செல்வராஜ், சந்தனகுமார் அடங்கிய தனிப்படையினர் சுவாமி சிலைகளை விற்க முயன்ற கும்பலை கண்காணித்தனர்.

மேலும் தரகர்கள் சிலரை அணுகி சுவாமி சிலைகளை வாங்குவதுபோல பேரம் பேசினர். பின்னர் சிலை திருட்டு கும்பலை நைசாக பேசி திண்டுக்கல்- பழனி சாலைக்கு வரவழைத்து அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 4 பேர் பிடிபட்டனர்.

போலீஸாரின் விசாரணையில் தெரியவந்த விவரம்: திண்டுக்கல் மாவட்டம் முள்ளிபாடியைச் சேர்ந்த சவரிமுத்து மகன் யோவேல் பிரபாகரன்(31). இவர் தனது கூட்டாளிகளான ஈஸ்வரன், குமாருடன் சேர்ந்து 2021 மே மாதம் திண்டுக்கல், தென்னம்பட்டி அருகில் மலையிலுள்ள ஆதிநாத பெருமாள், ரெங்க நாயகியம்மன் கோயிலிலுள்ள பழமையான சுவாமி சிலைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதன்படி, அங்கு சென்ற அவர்கள் கோயிலில் இருந்த செயலர் சண்முகசுந்தரம், பூசாரிகள் பாண்டியன், ராஜ்குமார் ஆகியோரை கத்திமுனையில் மிரட்டி தனி அறையில் பூட்டினர். பின்னர் அங்கிருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சந்திரசேகர், பார்வதியம்மாள் உலோகச் சிலைகளை கொள்ளையடித்து தப்பியது தெரியவந்தது.

இதுதொடர்பாக பிரபாகரன்(31), ஆர்எம் காலனி ராமன் மகன் இளவரசன் (38), கிருஷ்ணாபுரம் கணபதி மகன் பால்ராஜ் (43), பிள்ளையார் பாளையம் முரளி மகன் தினேஷ்குமார்(24) ஆகிய 4 பேரைக் கைதுசெய்து, அவர்களிடம் இருந்து சுவாமி சிலைகளை போலீஸார் கைப்பற்றினர். சிலைகள் திருடப்பட்ட கோயில் சங்க காலத்தைச் சேர்ந்தது எனத் தெரியவந்தது. மேலும், இதில் தொடர்புடைய ஈஸ்வரன், குமாரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT