க்ரைம்

புதுச்சேரியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட நாட்டு வெடி குண்டுகளுடன் பதுங்கிய 13 பேர் கைது

செய்திப்பிரிவு

புதுச்சேரி மாநிலம் மேட்டுப்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட சண்முகாபுரம் வெள்ளவாரி பாலம் அருகே புதரில் ஒருகும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் சாதாரண உடையில் அங்கு சென்று அந்த கும்பலை மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில், சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரம் அய்யனார் (26), மாணிக்க செட்டியார் நகர்விஸ்வநாதன் (21), திலாசுபேட்டை வீமன் நகர் அகிலன் (எ) பொட்டுக்கடலை (22), முத்தியால்பேட்டை டிவி நகர் சந்துரு (22), திலாசுப்பேட்டை சசி (எ) சசிகுமார் (20), சண்முகாபுரம் நெசவாளர் குடியிருப்பு சதீஷ் (20), கோரிமேடு காமராஜர் நகர் ஆனந்தகுமார் (20) ஆகியோர் என்பதும், எதிரிகளை கொலை செய்ய திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து 7 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 2 நாட்டு வெடிகுண்டுகள், 4 கத்திகள், 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர்அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மற்றொரு சம்பவம்

வில்லியனூர் அருகே அரசூர் பகுதியில் ஒரு கும்பல் வெடிகுண்டு தயாரிப்பதாக வில்லியனூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்றனர். அப்போது நாட்டு வெடிகுண்டு தயாரித்த 6 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், வில்லியனூர் கோபாலன் கடையை சேர்ந்த குமார் (எ) கலைக்குமார் (22), சதீஷ் (21), சுரேஷ் (21), தீனா (எ) யுவராஜ் (21), சதீஷ்குமார் (23) மற்றும் வாழப்பட்டாம்பாளையத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (25) ஆகியோர் என்பதும், குமார் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

காதலியை சந்திக்க அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். இதற்கு அந்த பெண்ணின் தாய் எதிர்ப்பு தெரிவித்து, கணுவாப்பேட்டையைச் சேர்ந்த சசிதரன் என்பவரிடம் இதுபற்றி முறையிட்டுள்ளார். இதையடுத்து சசிதரன் செல்போனில் குமாரைதொடர்பு கொண்டு மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த குமார், சசிதரனை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வீச்சரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT