க்ரைம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.111 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை விமான நிலையத்தில் ரூ.111.41 கோடி மதிப்புள்ள கொக்கைன், ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. எத்தியோப்பியா நாட்டில் இருந்து அவற்றைக் கடத்தி வந்த இந்தியர், வெளிநாட்டு பெண் கைது செய்யப்பட்டனர். சர்வதேச போதைப்பொருள் கடத்தல்கும்பலுடன் தொடர்பு உள்ளவர்களா என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எத்தியோப்பியா நாட்டிலிருந்து அதிக அளவு போதைப்பொருள் சென்னைக்கு கடத்திவர திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னைவிமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், எத்தியோப்பியா தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து எத்தியோபியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள்பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் தீவிரமாக சோதனை செய்துக் கொண்டிருந்தனர்.

கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த இக்பால் பாஷா (வயது 38) என்ற ஆண் பயணி அணிந்திருந்த காலணிகள், உள்ளாடைகள், கொண்டு வந்திருந்த காலணிகள், பேக்குகளை சோதனை செய்த போது, கொக்கைன் மற்றும் ஹெராயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் இருந்து ரூ.100 கோடி மதிப்புள்ள 9 கிலோ 590 கிராம் எடை கொண்ட கொக்கைன், ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், எத்தியோப்பியா தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து எத்தியோபியன் ஏர்லைன்ஸின் மற்றொரு விமானம் சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்தபிபியானா டா கோஸ்டா (59) என்ற அங்கோலா நாட்டு பெண் பயணியின் கைப்பையை அதிகாரிகள் சோதனை செய்தபோதுகைப்பையின் ரகசிய அறையில் கொக்கைன் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டுள்ள இக்பால் பாஷா, பிபியானா டா கோஸ்டா ஆகியோர் சென்னையில் யாரிடம் போதைப்பொருளை கொடுக்க இருந்தார்கள், இதற்கு முன்பு போதைப்பொருளை சென்னைக்கு கடத்தி வந்துள்ளார்களா, அவர்களுக்கு சர்வதேச போதைபொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக ஒரே நேரத்தில் ரூ.111.41 கோடி மதிப்புள்ள கொக்கைன், ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதிக விலை கொண்ட போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்திவருவதும் சமீபகாலமாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT