க்ரைம்

காதல் விவகாரத்தில் இரு பிரிவின‌ரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கனககிரி அருகேயுள்ள ஹூலித‌ர் கிராமத்தை சேர்ந்த 25 வயதான இந்து இளைஞர் அதே கிராமத்தை சேர்ந்த 21 வயதான‌ முஸ்லிம் பெண்ணை காதலித்தார். இருவரும் கடந்த 10-ம் தேதி கிராமத்தை விட்டு வெளியேற முயன்றனர். இந்த விவகாரத்தால் இருவரின் குடும்பத்தினரிடையே ஏற்பட்ட‌ வாக்குவாதம் மோதலாக மாறியது.

நேற்று முன்தினம் மாலை நடந்த மோதலில் ஒருவர் மற்றவரை கற்களாலும், கம்புகளாலும் தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த‌ யாங்கப்பா தல்வார் (60), பாஷாவலிசாப் மலிகாடி (22) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். தர்மண்ண ஹரிஜன் (20) உள்ளிட்ட 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் குல்பர்கா அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹூலிதர் கிராமத்தில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்கு ஊரில் இருந்து வெளியேறவும், வெளியூரை சேர்ந்தவர்கள் உள்ளே வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் நேற்று வீடுகளுக்குள்ளே முடங்கினர்.

இதுகுறித்து கர்நாடக வடக்கு மண்டல ஐஜிபி மனீஷ் கர்பிகர் கூறுகையில், ''இந்த கிராமத்தில் நாயகா சாதியின‌ரும், முஸ்லிம்களும் கணிசமாக வசிக்கின்றனர். இரு மதத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்ள முற்பட்டதால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை பகல் நேரத்தில் தொடங்கிய வாக்குவாதம் மோதலில் முடிந்துள்ளது. இந்த வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம். இதுவரை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.

SCROLL FOR NEXT