மதுரை: சவுதி அரேபியாவுக்கு வேலைக்காகச் சென்ற பரமக்குடி இளைஞர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
பரமக்குடியைச் சேர்ந்த கிரிஜா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் சரத்குமார் (30). சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் பெட்ரோல் பங்க்கில் பணிபுரிவதற்காக கடந்த ஜூன் மாதம் விமானத்தில் சென்றார்.
முன்னதாக ஏர்வாடியைச் சேர்ந்த ஒருவர் சவுதியில் வசிக்கும் ஒருவரிடம் கொடுத்துவிடுமாறு கூறி, கருவாடு பார்சலை எனது கணவரிடம் கொடுத்து விட்டார்.
ரியாத் விமான நிலையத்தில் கருவாடு பார்சலை சோதனையிட்டபோது, அதில் தடை செய்யப்பட்ட பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. அதன் பிறகு என் கணவர் என்ன ஆனார் எனத் தெரியவில்லை. எனவே. கணவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது. மத்திய அரசு தரப்பில், மனுதாரரின் கணவர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு ரியாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்த மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.