நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் சோழவித்தியாபுரம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி(48), விவசாயி. இவரது மனைவி ரேவதி(45). இவர்களது மகளின் திருமணம் ஆக.28-ம் தேதி நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு, உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் வைப்பதற்காக நேற்று முன்தினம் காலை வெளியே சென்ற ரேவதி இரவில் தாமதமாக வீடு திரும்பியுள்ளார்.
இதனால், ரேவதியுடன் தகராறில் ஈடுபட்ட கார்த்தி, அவரை தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில், வாசலில் இருந்த இரும்பு கேட்டில் மோதிய ரேவதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு, திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ரேவதியை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். தகவலறிந்த கீழையூர் போலீஸார் அங்கு சென்று, ரேவதியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கார்த்தியை கைது செய்தனர்.