கும்மிடிப்பூண்டி: கவரப்பேட்டை அருகே உள்ள கெட்டனமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் வடுவம்மாள் (80). இவர், நேற்று முன்தினம் இரவு, தன் வீட்டுக்கு வெளியே கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவில் வந்த 3 பேர், வீட்டின் கதவை உடைக்க முயன்றுள்ளனர். அப்போது, சத்தம் கேட்டு எழுந்த வடுவம்மாள் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, தப்பி ஓட முயன்ற 3 பேரில், வடமாநில இளைஞர் ஒருவர் கால் தடுமாறி கீழே விழுந்து, பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டார்.
அவரை பொதுமக்கள் தாக்கியதாக தெரிகிறது. இதில் மயங்கி விழுந்த அந்த இளைஞர் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள கவரப்பேட்டை போலீஸார், உயிரிழந்த வடமாநில இளைஞர், அவர் கால் தடுமாறி கீழே விழுந்ததால் உயிரிழந்தாரா, பொதுமக்கள் தாக்கியதால் இறந்தாரா உடன் வந்த மற்ற இருவர் யார் என்பது குறித்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.