க்ரைம்

உசிலம்பட்டியில் 4 வயது சிறுமி கடத்தலா? - சிசிடிவி மூலம் ஒன்றரை மணி நேரத்தில் மீட்ட போலீஸ்

செய்திப்பிரிவு

உசிலம்பட்டியில் திடீரென காணாமல் போன 4 வயது சிறுமியை, சிசிடிவி கேமரா மூலம் ஒன்றரை மணி நேரத்தில் போலீஸார் மீட்டனர்.

உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மனைவி சத்யா. இவர்களது 4 வயது மகள் ஜனனி. உசிலம்பட்டி அருகே தீனாவிலக்கு பகுதியில் உள்ள பாட்டி வீரம்மாள் வீட்டுக்கு நேற்று சிறுமி சென்றிருந்தாள். அங்கு வீட்டின் முன் விளையாடிய சிறுமியை திடீரென காணவில்லை.

இது தொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில், உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையிலான போலீஸார் அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆண்-பெண், சிறுமியைத் தூக்கிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து உசிலம்பட்டியில் போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில் சந்தேகப்படும்படி சிறுமியுடன் வந்த சில்லாம்பட்டியைச் சேர்ந்த குமார்- மகேஸ்வரி தம்பதியை பிடித்து விசாரித்தனர். இதில் அச்சிறுமி காணாமல் போன ஜனனி எனத் தெரியவந்தது. மாயமான ஒன்றரை மணி நேரத் தில் சிறுமியை போலீஸார் மீட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: சிறுமியின் பாட்டி வீட்டுக்கு குமார்-மகேஸ்வரி தம்பதி அடிக்கடி வருவர். இவர்கள் நேற்று கடைக்குச் சென்றபோது வீட்டுவாசலில் ஜனனியைக் கண்டதும் வீட்டுக்கு வருகிறாயா என அழைத்துள்ளனர். அப்போது பாட்டி வீட்டில் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் சிறுமியை தூக்கிச் சென்றுள்ளனர்.

குமாரின் இருசக்கர வாகனத்தை வேறொரு நபர் வாங்கிச் சென்றதால் உடனே சிறுமியை பாட்டியின் வீட்டுக்கு அழைத்து வர முடியாத நிலை ஏற்பட்டதும் தெரியவந்தது. இருப்பினும், அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கிறோம் என்றனர்.

SCROLL FOR NEXT