சென்னை: கும்பகோணம் அருகே உள்ள சிவன் கோயிலில் 51 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ஐம்பொன் பார்வதி சிலை, அமெரிக்காவில் உள்ள ஏல நிறுவனத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை மீட்கும் முயற்சியில் சிலை கடத்தல்தடுப்பு போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக காவல் துறையின் சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் கே.வாசு என்பவர் கடந்த 2019-ல் கொடுத்த புகாரில் கூறியிருந்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் கோயிலில் இருந்த12-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கால ஐம்பொன் பார்வதி சிலைஉள்ளிட்ட 5 சிலைகள் 1971-ம்ஆண்டு திருடப்பட்டுள்ளன. இதுகுறித்து அப்போதே நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தஞ்சாவூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பலமுறை புகார் அளித்தும் வழக்குகூட பதிவு செய்யவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி,ஐ.ஜி. தினகரனின் நேரடி மேற்பார்வையில் ஆய்வாளர் சித்ரா விசாரணை மேற்கொண்டார். வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்கள், ஏல மையங்களில் உள்ளசிலைகள் குறித்து ஆய்வு செய்ததில், மாயமான பார்வதி சிலை,அமெரிக்காவில் உள்ள போன்ஹாம்ஸ் ஏல நிறுவனத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
52 செ.மீ உயரம் உள்ள இந்த சிலை சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்டது. யுனெஸ்கோ ஒப்பந்த அடிப்படையில் அந்த சிலையை மீட்டு மீண்டும் தண்டந்தோட்டம் கோயிலில் ஒப்படைக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.