க்ரைம்

கோவில்பட்டி வியாபாரியை கடத்தி ரூ.5 லட்சம் பேரம்: கரூர் மாவட்டத்தில் கர்நாடக கும்பலை மடக்கிய போலீஸார்

சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இரும்பு வியாபாரியை கடத்தி ரூ.5 லட்சம் பறித்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை கரூர் மாவட்டத்தில் போலீஸார் மடக்கி கைது செய்தனர்.

கோவில்பட்டி நடராஜபுரம் தெருவைச் சேர்ந்தவர் தங்கம்(63). இவர் இளையரசனேந்தல் சாலையில் பாத்திரக்கடை மற்றும் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் மதியம் இவரது கடைக்கு காரில் சிலர் வந்தனர். தங்களை ஓசூர் தனிப்பிரிவு போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்ட அவர்கள், ‘நீங்கள் சமீபத்தில் வாங்கிய செம்பு கம்பிகள் திருடப்பட்டவை’ எனக்கூறியுள்ளனர்.

மேலும், தங்கத்தை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி, ‘கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.20 லட்சம் தர வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளனர். இறுதியில் ரூ.5 லட்சம் தருவதாக தங்கம் கூறியுள்ளார்.

தனது மகன் செந்திலை செல்போனில் அழைத்து ரூ.5 லட்சம் கொண்டு வரும்படி கூறியுள்ளார். மதுரை மாவட்டம் கப்பலூர் அருகே கடத்தல் கும்பல் தெரிவித்த இடத்துக்கு பணத்துடன் செந்தில் சென்றார். அங்கு அவரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அந்த கும்பல் தங்கத்தை விடுவித்து விட்டு தப்பியது.

விரட்டிய போலீஸார்

புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீஸார் தங்கத்தை தங்களது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சுங்கச்சாவடி சென்றனர்.

அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனையிட்டபோது, தான் கடத்தப்பட்ட காரை தங்கம் அடையாளம் காட்டினார். அந்த காரின் பாஸ்டாக் மூலம் போலீஸார் பின்தொடர்ந்து சென்றனர். கரூர் சுங்கச்சாவடியை கடக்கும்போது காரின் எண் கர்நாடக மாநில பதிவு எண்ணாக மாற்றப்பட்டிருந்தது தெரியவந்தது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் கரூர் மாவட்ட போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அரவக்குறிச்சியை அடுத்த வேளஞ்செட்டியூரில் உள்ள சுங்கச்சாவடியில் அந்த காரை போலீஸார் மடக்கினர்.

ஆனால், கார் நிற்காமல் வேகமாகச் சென்றது. வெள்ளியணை அருகே ஆட்டையாம்பரப்பு பகுதியில் செயற்கையாக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி காரை போலீஸார் மடக்கினர்.

காரில் இருந்த 5 பேரும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள் பெங்களூரு ஐடிஐ காலனியைச் சேர்ந்த டேனியல் எசெக்ஸ் (50), பெரோஸ் கான் (47), கே.கே.அள்ளி பகுதியைச் சேர்ந்த பவுல் (30), ராஜ்குமார் கார்டன் பகுதியைச் சேர்ந்த ஏசு தாஸ்(34), மங்களூர் கபாப் பகுதியைச் சேர்ந்த பாரூக்(29) எனத் தெரியவந்தது.

அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார், போலி வாக்கி டாக்கி மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இரும்பு, செம்பு கம்பிகளை திருடும் இந்த கும்பல், அவற்றை பழைய இரும்பு வியாபாரிகளிடம் விற்பது வழக்கம். திருச்சி, கோவை மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில் இவர்களிடம் இரும்பு வியாபாரம் செய்த சிலரை, இந்த கும்பல் கடத்தி பணம் பறித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம் என, போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT