பொள்ளாச்சியை சேர்ந்த 9 வயது சிறுவன், தனியார் பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவனின் வீட்டில் கடந்த 6 மாதங்களாக அடிக்கடி பணம் காணாமல் போனதால் சந்தேகமடைந்து பெற்றோர் விசாரித்தபோது, பணத்தை எடுத்துச் சென்று அவருடன் இந்தி டியூசன் படிக்கும் 2 மாணவர்களுக்கும், இந்தி டீச்சரின் மகனுக்கும் அளித்து வருவது தெரியவந்தது.
சிறுவனிடம் பெற்றோர் தொடர்ந்து விசாரித்ததில், பொள்ளாச்சியில் உள்ள புத்தக கடையில் வேலை பார்க்கும் இந்தி டீச்சரின் 17 வயது மகன், டியூசனுக்கு வரும் 10-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் என மூன்று பேரும் சேர்ந்து, சிறுவன் மற்றும் அவரது தாய் ஆகியோரின் புகைப்படத்தை தவறாகவும், ஆபாசமாகவும் சித்தரித்துள்ளனர். சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தை அனைவருக்கும் அனுப்பிவிடுவோம் என மிரட்டி, சிறுவனிடம் அடிக்கடி பணம் பறித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின்பேரில் கிழக்கு காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிந்து, 3 பேரையும் கைது செய்து கோவையில் உள்ள இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைத்தனர்.