க்ரைம்

திருப்பூரில் மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளை: கட்டிட தொழிலாளர்கள் மூவர் கைது

செய்திப்பிரிவு

திருப்பூரில் மூதாட்டியைக் கொன்று நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்து, 40 பவுன் நகை மற்றும் ரூ.9.82 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த சோளிபாளையம் சீனிவாசா நகரை சேர்ந்தவர் கோபால் (70). இவரது மனைவி முத்துலட்சுமி (62). இவர்களுக்கு 2 மகன்கள். இருவரும் திருமணமாகி, திருப்பூர் மற்றும் கோவையில் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் முத்துலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலை 6 மணிக்கு கோபால் வீடு திரும்பியபோது, கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது.

திறந்து உள்ளே சென்றபோது, படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் முத்துலட்சுமி சடலமாக தொங்கினார். இது குறித்து 15 வேலம்பாளையம் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.

முத்துலட்சுமியின் சடலம், பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில், முத்துலட்சுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்த மர்மநபர்கள், 5 பவுன் தாலிச் சங்கிலி உட்பட பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இந்நிலையில், கொலை நிகழ்ந்த வீட்டின் அருகே கட்டிட வேலை செய்து வந்த 3 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அதில் அவர்கள், ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த அருண்குமார் (24), அமரன் (21) என்பதும், கோபால் வீட்டுக்கு அடிக்கடி சென்று குழாய் உள்ளிட்டவற்றை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மேலும், தினேஷ்குமார் (27) என்பவருடன் சேர்ந்து, முத்துலட்சுமியை கொலை செய்து, தற்கொலை செய்து கொண்டதுபோல தூக்கில் தொங்கவிட்டதும், 40 பவுன் நகை, ரூ.9 லட்சத்து 82 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். 12 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீஸாரை மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் பாராட்டினார்.

SCROLL FOR NEXT