க்ரைம்

ஊத்தங்கரை அருகே கோயிலில் பூஜை செய்துவிட்டு உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணையில் உள்ள கோயில் பூஜை செய்துவிட்டு உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணை உள்ளது. இந்த அணையின் நுழைவுவாயிலில், ஓங்காளி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தினமும் பூஜை செய்து வழிப்பாடு செய்வது வழக்கம். அதன்படி நேற்று (ஆக.5) வழக்கம் போல் பூஜைகள் செய்த பின்னர் கோயில் பூட்டப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவில் கோயிலுக்கு வந்த மர்ம நபர்கள், முன்னதாக கோயிலின் அருகே உள்ள கதிர்வேல் என்பவரின் மளிகை கடையை உடைத்து, பூஜை பொருட்களை திருடினர்.

பின்னர், கோயில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்துவிட்டு, உண்டியல் உடைத்து அதில் உள்ள பணத்தை திருடிச் சென்றனர். இன்று (ஆக.6) அவ்வழியே சென்ற பக்தர்கள், கோயிலின் பூட்டி உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சியடைந்து, ஊத்தங்கரை போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர் திருட்டு: ஊத்தங்கரை அருகே, சென்னப்பநாயக்கனூர், பாம்பாறு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8 வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன. பூட்டிய வீடுகளில் நோட்டமிட்டு தொடர் திருட்டில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்களை போலீஸார் ரோந்து பணியை தீவரப்படுத்தி கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT