திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே தென் பெண்ணையாற்றில் 3 குழந்தைகளை தள்ளி கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு தாய் முயன்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சதாகுப்பம் கிராமத்தில் வசிப்பவர் கட்டிடத் தொழிலாளி பரசுராமன் மனைவி அமுதா(27).
இவர் தனது 5 மற்றும் 4 வயது மகன்கள் மற்றும் 7 மாத பெண் குழந்தையுடன் வாழவச்சனூர் கிராமத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் நேற்றுஉயிருக்குப் போராடினர். இதையறிந்த கிராம மக்கள் ஆற்றில் இறங்கி 4 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில், அமுதா உயிருடன் மீட்கப்பட்டார். மேலும், உயிரிழந்த நிலையில் 3 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டன. இதுகுறித்து கிராம மக்கள் கொடுத்ததகவலின் பேரில், வாணாபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், அமுதாவை சிகிச்சைக்காகவும் மற்றும் 3 குழந்தைகளின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காகவும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.