புதுச்சேரி: புதுச்சேரியில் மாணவிக்கு வாட்ஸ்அப்பில் ஆபாசச் செய்தி அனுப்பி மிரட்டிய புகாரில், ஆசிரியரை தனியார் பள்ளி நிர்வாகம் இன்று பணிநீக்கம் செய்துள்ளது. குழந்தைகள் நலக்குழுவின் புகாரின் பேரில் அவர் மீது போக்சோவில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மரப்பாலம் 100 அடி சாலையில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பெற்றோரின்றி பாதுகாவலர் உதவியுடன் இப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவிக்கு, விலங்கியல் பாடம் எடுக்கும் ஆசிரியர் ஒருவர் கடந்த 2 மாதங்களாக ஆபாச செய்திகள், படங்களின் லிங்குகளை அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்த வந்ததோடு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அச்சிறுமி தனது பாதுகாவலரிடம் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக சமூக அமைப்புகளிடமும் தெரிவிக்கப்பட்டது. இதையறிந்த தமிழர் களம் அழகர், மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன், திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட சமூக அமைப்புகளைச் சேர்ந்தோர் சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியின் முதல்வர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த முதலியார்பேட்டை போலீஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இது தொடர்பாக புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவுக்கு புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, குழந்தைகள் நலக்குழு அலுவலர் சிவசாமி தலைமையிலான குழுவினர், பாதிப்புக்குள்ளான பள்ளி மாணவியை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பள்ளியிலும் விசாரித்தார். விசாரணைக்கு பிறகு முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், பாமக மாநிலத் தலைவர் கணபதி தலைமையில் கட்சியினர் பள்ளி முன்பு இன்று போராட்டம் நடத்த வந்தனர். அவர்களை பள்ளி நிர்வாகத்தினர் அழைத்து பேசினர். அப்போது குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரை பணியில் இருந்து நீக்கியுள்ளோம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, பாமக மாநிலத் தலைவர் கணபதி கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியரை பணியிலிருந்து நீக்கியுள்ளதாக பள்ளி தரப்பில் தெரிவித்தனர். பள்ளி தரப்பில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரவுள்ளதாக குறிப்பிட்டனர். வேறு யாரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று விசாரிப்பதுடன் பள்ளி தரப்பிலும் புகார் தரவுள்ளதாக குறிப்பிட்டதால் போராட்டம் நடத்தவில்லை" என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், முதலியார்பேட்டை போலீஸார் கூறுகையில், "குழந்தைகள் நலக்குழு அளித்த தகவல் அறிக்கையின்படி குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் மீது போக்சா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். குறிப்பாக மாணவியிடம் ஆசிரியர் சீண்டலில் ஈடுபட்டது, பாலியல் ரீதியான குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக பதிவு செய்கிறோம். பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரித்து வருகிறோம். அதையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தனர்.