சென்னை: சென்னையில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்புஉள்ளிட்ட வழிப்பறி கொள்ளையை முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 692 குற்றவாளிகள் தணிக்கை செய்யப்பட்டனர்.
இவர்களில் 108 பேர் தற்போது சிறையில் இருப்பது தெரியவந்தது. மீதம் உள்ளவர்கள் மீண்டும் வழிப்பறியில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்களைக் கண்டறிந்த போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர். போலீஸாரின் நடவடிக்கையால் பயந்து போன அவர்களில் 59 பேர் திருந்தி வாழப்போவதாக போலீஸாரிடம் எழுதிக் கொடுத்தனர்.
இதுதவிர 159 பேரிடம் இனி எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடக் கூடாது என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவாக உள்ளவர்களைப் பிடித்து, குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.