நன்னிலம் அருகே ஆணைக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின்பேரில், கணித ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆணைக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் கார்த்திகை சாமி. இவர், அப்பள்ளியில் பயிலும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் மாணவிகள் புகார் தெரிவித்த நிலையில், அந்தப் புகார் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜனிடம் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன் உத்தரவின்பேரில், மாவட்டக் கல்வி அலுவலர் பார்த்தசாரதி நேற்று முன்தினம் அப்பள்ளிக்குச் சென்று, ஆசிரியர் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார். மேலும், சைல்டு லைன் அதிகாரிகளும் அங்கு சென்று விசாரித்து, அறிக்கை சமர்ப்பித்தனர்.
இந்த அறிக்கைகளின் அடிப்படையில் கார்த்திகைசாமியை பணியிடை நீக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.