ராமநாதபுரம் | வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த செல்போன், நகைகளை திருடியதாக தலைமைக் காவலர்கள் இருவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் ஆயுதப் படையைச் சேர்ந்த காவலர் அசோக்குமார். இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கை விசாரிக்கும் ராமநாதபுரம் சிபிசிஐடி போலீஸார், வழக்கில் கைப்பற்றிய பொருட்களைக் கேட்டனர். அப்போது அசோக்குமாரின் செல்போன் மாயமானது தெரிந்தது.
சைபர் கிரைம் போலீஸார் விசாரித்ததில் அசோக்குமாரின் செல்போனை பயன்படுத்திய ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் அங்குள்ள கடையில் வாங்கியதாக தெரிவித்தார். கடை உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலைய தலைமைக் காவலர்கள் சுரேஷ், கமலக்கண்ணன் ரூ.2 ஆயிரத்துக்கு செல்போனை விற்றது தெரியவந்தது.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை தலைமைக் காவலர்கள் இருவரையும் தற்காலிகப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இவர்கள் செல்போன் மற்றும் வழக்குகளில் பறிமுதல் செய்து வைத்திருந்த நகைகளை திருடி விற்றது தெரியவந்தது. இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.