புதுச்சேரி: புதுச்சேரி அருகே பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மாணவியை வெட்டி படுகொலை செய்த இளைஞரை ஒரு வாரத்துக்கு பின்னர் போலீஸார் கைது செய்தனர். போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது அவரது வலது கையில் முறிவு ஏற்பட்டது. இதனை போலீஸாரே தெரிவித்தனர்.
புதுச்சேரி திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் மகள் கீர்த்தனா (17). இவர் கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார். நாகராஜின் முதல் மனைவியின் சகோதரர் மகன் முகேஷ் (22). இவர் கீர்த்தனாவை காதலித்து வந்துள்ளார். ஆனால் கீர்த்தினா அதனை நிராகரித்து அவரைத் தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 19-ம் தேதி மாலை கீர்த்தனா, கல்லூரி முடிந்து தனியார் பேருந்தில் சன்னியாசிக்குப்பம் பேருந்து நிலையத்தில் வந்திறங்கினார். அப்போது அங்கு நின்றிருந்த முகேஷ், மாணவி கீர்த்தினாவை கத்தியால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். இது தொடர்பாக திருபுவனை போலீஸார் வழக்குப் பதிவு செய்து முகேஷை தேடி வந்தனர்.
முகேஷ் மீது ஏற்கெனவே வெடிகுண்டு வீச்சு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், செல்போனை வீட்டிலேயே வைத்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. அவர் அருகிலுள்ள தமிழகப் பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்து, அவரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் ஒருவார காலமாக அவர் போலீஸில் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
இதனிடையே கடந்த 24-ம் தேதி போலீஸார் கொலையாளி முகேஷின் புகைப்படத்தை வெளியிட்டு, அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். அதே நேரத்தில் கொலை நடந்து 6 நாட்களாகியும் கொலையாளி கைது செய்யப்படாததை கண்டித்து நேற்று 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் புதுச்சேரி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் புதுச்சேரி போலீஸ் சீனியர் எஸ்பி தீபிகாவிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சீனியர் எஸ்பி கொலையாளியை விரைந்து கைது செய்ய வேண்டுமென திருபுவனை போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் கொலையாளி முகேஷ் சன்னியாசிக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனி அருகில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று இரவு அவரை கைது செய்ய போலீஸார் அப்பகுதிக்கு சென்றனர்.
அப்போது போலீஸாரை கண்டதும் முகேஷ் மதில் சுவர் ஒன்றை ஏறி குதித்து தப்பியோட முயன்றுள்ளார். இதில் தடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கையில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிடித்த போலீஸார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் முகேஷை காவல் நிலையம் அழைத்து வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கீர்த்தனாவை முகேஷ் காதலித்து வந்துள்ளார். ஆனால் ரவுடிகளுடன் அவர் தொடர்பில் இருப்பதால் மாணவி கீர்த்தனா அவரை காதலிக்க மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முகேஷ் மாணவியை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது என்று போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது.
இதையடுத்து முகேஷை கைது செய்த போலீஸார், கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.