அருப்புக்கோட்டை ஆசிரிய தம்பதி கொலை வழக்கில் சந்தேகத்துக்கிடமாக பிடிபட்டுள்ள 5 பேரிடம் தனிப்படை போலீஸார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை எம்டி.ஆர். நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரிய தம்பதிகளான சங்கரபாண்டியன், அவரது மனைவி ஜோதிமணி ஆகியோர் கடந்த 18-ம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். ஜோதிமணி அணிந்திருந்த சுமார் 10 பவுன் நகை கொள்ளை போனதோடு வீடு முழுவதும் மிளகாய்ப் பொடி தூவப்பட்டிருந்தது.
இச்சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதோடு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் தலைமையில் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன் சங்கரபாண்டியனின் செல்போன் காணாமல்போனதும், அது தற்போது வரை பயன்பாட்டில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக, அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த 5 பேரை பிடித்து தனிப்படை போலீஸார் ரகசிய விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
பிடிபட்ட நபர்கள் பயன்படுத்திய செல்போன் எண்கள் மூலம் அவர்களுடன் அடிக்கடி தொடர்பில் இருந்த நபர்கள் குறித்தும் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.