மும்பையில் தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக திருவாரூரைச் சேர்ந்த 2 பேரை மும்பை போலீஸார் நேற்று முன்தினம் திருவாரூரில் கைது செய்தனர்.
திருவாரூரில் செல்போன் கடை நடத்தி வந்தவர் ஹாஜி. மேலும், ரகசியமாக தங்கக் கடத்தலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவர், தனது நண்பரான திருவாரூர் மஜித்தோப்பைச் சேர்ந்த அவுரங்கசீப்பை, சென்னையில் ஒரு செல்போன் கடையில் வேலைக்கு சேர்த்து விட்டதுடன், அவரையும் தனது தங்கக் கடத்தல் தொழிலில் ஈடுபட செய்துள்ளார்.
இந்தநிலையில், தங்கம் கடத்தி வருவதற்காக தெலங்கானாவைச் சேர்ந்த சங்கர் மற்றும் அவுரங்கசீப் ஆகிய இருவரையும் மும்பைக்கு ஹாஜி அனுப்பிவைத்துள்ளார். கேப்சூல் வடிவிலான தங்கக் கட்டிகளை விழுங்கச் செய்து, சென்னைக்கு கடத்தி வந்துள்ளனர்.
தொடர்ந்து, சென்னையில் கடத்தல் கும்பலிடம் சங்கரை ஒப்படைத்து, சங்கரை ஸ்கேன் செய்து 2 கேப்சூல்களையும் எடுத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு அவுரங்கசீப்பும், ஹாஜியும் தப்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து, சென்னை தனியார் மருத்துவமனையில் சங்கரை ஸ்கேன் செய்து பார்த்தபோது, ஒரு கேப்சூல் மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது. மற்றொரு கேப்சூல் எங்கே எனக் கேட்டு அந்த கடத்தல் கும்பல் சங்கரைத் துன்புறுத்தி வந்துள்ளது.
மேலும், தங்களது குழுக்கள் மூலம் காரைக்கால், திருவாரூர் பகுதிகளில் ஹாஜியையும், அவுரங்கசீப்பையும் தேடி வந்துள்ளனர். இதனிடையே, சங்கரை உடன் அழைத்துக் கொண்டு திருச்சி வந்த கடத்தல் கும்பல், திருச்சி தனியார் மருத்துவமனையில் மீண்டும் ஒருமுறை சங்கரை ஸ்கேன் செய்ய அனுமதித்தனர். அப்போது, மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்களிடம், தான் கடத்தல் கும்பலிடம் சிக்கிக் கொண்டுள்ளதாக சங்கர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின் பேரில் திருச்சி காவல் துறையினர் விரைந்து சென்று சங்கரை மீட்டனர். தகவல் அறிந்து மும்பை போலீஸாரும் வந்தனர். சங்கரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்து, திருவாரூரில் அவுரங்கசீப் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
அதைத்தொடர்ந்து, மும்பை போலீஸார் திருச்சி போலீஸாருடன் இணைந்து நேற்று முன்தினம் திருவாரூர் சென்றனர். அங்கு திருச்சி, திருவாரூர் போலீஸார் உதவியுடன் அவுரங்கசீப்பை அவரது வீட்டில் கைது செய்தனர். மேலும், சங்கரை கடத்திய கும்பலில் இருந்த திருவாரூரைச் சேர்ந்த புறா விஜய் என்பவரையும் விளமல் டாஸ்மாக் கடையில் கைது செய்தனர்.
பின்னர், அவர்கள் இருவரையும் திருவாரூர் மாவட்ட குற்றவியல் நீதிபதி முன்னிலையில் நேற்று முன்தினம் இரவு மும்பை போலீஸார் ஆஜர்படுத்தி, இருவரிடமும் மும்பையில் விசாரணை நடத்த அனுமதிக் கடிதம் பெற்று அழைத்துச் சென்றனர்.