சேலம்: சேலம் அருகே பெண்ணை கொலை செய்து தண்டவாளத்தில் வீசிய வழக்கில் மூன்று பெண்கள் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே ராமமூர்த்தி நகர் பகுதியில் கடந்த 17-ம் தேதி ரயில்வே தண்டவாளத்தில் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடந்தது. உடலில் காயங்கள் இருந்தன. தகவலறிந்த தீவட்டிப்பட்டி போலீஸார் சடலத்தை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: தருமபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவருடைய மனைவி மலர்விழி (56) என்பது தெரியவந்தது. இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மணி உயிரிழந்த நிலையில், வட்டிக்கு பணம் கொடுத்து மலர்விழி வருமானம் ஈட்டி வந்துள்ளார்.
இதில், தருமபுரி மாவட்டம் குண்டல்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (28) என்பவருக்கு ரூ.1.5 லட்சம் வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். பணத்தை கோவிந்தராஜ் திருப்பி தராமல் இழுத்தடித்ததால் மலர்விழி அவரது வீட்டுக்குச் சென்று கண்டித்துள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ், மலர்விழியை கொலை செய்து காடையாம்பட்டி அருகே ராம்நகர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் உடலை வீசியுள்ளார்.
இதற்கு கோவிந்தராஜின் சகோதரி புனிதா, நண்பர் அன்பானந்த், பிரபாவதி, விஜயகுமாரி ஆகியோர் உதவியுள்ளனர். இதையடுத்து கோவிந்தராஜ உள்ளிட்ட 5 பேரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.