நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழந்ததை அடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த பாண்டமங்கலம் 12வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம்(63). அவரது மனைவி பழனியம்மாள்(57). இருவரும் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். வீட்டில் ஆடுகளும் வளர்த்து வருகின்றனர். அதற்காக அமைக்கப்பட்ட கொட்டகைக்கு வீட்டிலிருந்து வயர் மூலம் மின்சாரம் எடுத்து உள்ளனர்.
இன்று காலை பழனியம்மாள் ஆட்டுக் கொட்டகையில் உள்ள கம்பியில் துணி காய வைக்க முற்பட்ட உள்ளார். அப்போது ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் தாக்கி அலறல் சத்தத்துடன் கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது கணவர் பரமசிவம் ஓடிச்சென்று அவரை தூக்க முற்பட்ட போது அவரும் மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு வத்த பக்கத்து வீட்டை சேர்ந்த கணேசன் என்பவர் அவர்களை மீட்க முற்பட்டார். அப்போது அவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவர் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்திவேலூர் போலீஸார் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரமசிவம், பழனியம்மாள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.