க்ரைம்

எடப்பாடி அருகே முகமூடி கொள்ளையர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து ரூ.1.25 லட்சம் திருட்டு

செய்திப்பிரிவு

எடப்பாடி அருகே வீடு புகுந்து ரூ.1.25 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்களை பூலாம்பட்டி போலீஸார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கள்ளுக்கடை காவான் காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய் கணேஷ் (48). இவரது மனைவி விஜயலட்சுமி (42). ஜெய்கணேஷ் கொண்டலாம்பட்டி பகுதியில் வெளிநாட்டு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை செய்யும் அலுவலகம் வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு ஜெய்கணேஷ் வீட்டின் முதல் மாடியின் வெளிப்புறத்திலும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டின் உட்புறத்திலும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் சத்தம் கேட்டு விஜயலட்சுமி எழுந்து பார்த்தபோது, முகமூடி அணிந்த நபர்கள் வீட்டில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். பூஜை அறையில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதிலிருந்த ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கொள்ளையடிக் கப்பட்டிருந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் பூலாம்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். முகமூடி அணிந்த நபர்கள் வீட்டின் பிரதான வாசல் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT