முதியவர்களின் அவசர உதவிக்காக 24 மணி நேரமும் செயல்படும் அலைபேசி எண்ணை காவல்துறை வெளியிட்டுள்ளது.
ராஜபாளையம் மற்றும் அருப்புக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதிகள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் வயதான தம்பதிகள் மற்றும் தனிமையில் வசித்து வரும் முதியவர்களுக்கு உதவும் வகையில் விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பில் 93422 59833 என்ற பிரத்தியேக மொபைல் எண் வாட்ஸ் ஆப் சேவையுடன் விருதுநகர் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.
தனிமையில் வசித்து வரும் முதியவர்கள் மற்றும் வயதான தம்பதிகளுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டாலும், தங்களது பகுதியில் சந்தேகப்படும்படியான நபர்கள் பற்றிய தகவல் தெரிந்தாலும் இக்குறிப்பிட்ட மொபைல் எண்ணைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மனோகர் தெரிவித்துள்ளார்.
மேலும் குடியிருப்பு பகுதிகளில் அதிகப்படியான கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கத்தினரை வலியுறுத்த டிஎஸ்பிக்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.