க்ரைம்

ராணிப்பேட்டை | மனைவியை கொலை செய்த கணவர் கைது

செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை நவல்பூர் தியாகி மாணிக்கம் நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் சுலைமான் சேட் (45). தனியார் காஸ் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மும்தாஜ் (35). இவர்களுக்கு முகமது பிலால் (15), முகமது ரிஸ்வான் (12) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்களுடன் சுலைமானின் தந்தை ஷேக் ஜபார் (78) என்பவரும் வசித்து வந்துள்ளார். ஷேக் ஜபாருக்கும், மருமகள் மும்தாஜூக்கும் கூடாநட்பு இருந்துள்ளது. இதை சமீபத்தில் நேரில் பார்த்த சுலைமான் சேட், மனைவியிடம் தகராறு செய்ததுடன் தந்தையை சரமாரியாக தாக்கி மேல்விஷாரத்தில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுள்ளார்.

மனைவி செல்போனில் வேறு சிலரும் பேசி வருவதை சுலைமான் கண்டுபிடித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுலைமான் சேட் நேற்று மகன்கள் பள்ளிக்கு சென்ற பிறகு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதில், வாக்குவாதம் முற்றியதில் மனைவியை கொலை செய்துவிட்டு வெளியே சென்றுள்ளார். மும்தாஜ் வீட்டில் உயிரிழந்துக் கிடப்பதை நேற்று மாலை சிலர் பார்த்துள்ளனர்.

இது குறித்த தகவலின் பேரில் ராணிப்பேட்டை காவல் துறையினர் விரைந்து சென்று மும்தாஜின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், சுலைமான் சேட்டை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT