க்ரைம்

ஓசூர் தனியார் நிறுவன ஊழியரிடம் நூதன முறையில் ரூ.15.60 லட்சம் மோசடி

செய்திப்பிரிவு

ஓசூர் தனியார் நிறுவன ஊழியரிடம் பரிசு விழுந்திருப்பதாகக் கூறி நூதன முறையில் ரூ.15.60 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஓசூர் தாலுகா அலசநத்தம் சாலையைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (38). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது முகவரிக்கு கடந்த பிப்ரவரி 27-ம் தேதி, பார்சல் ஒன்று வந்தது. பார்சலை பிரித்து பார்த்த பிரேம்குமார் அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.

மறுமுனையில் பேசியவர், ‘தன்னை நாப்டால் நிறுவன அலுவலர் என்றும், உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது. அதற்காக ஜிஎஸ்டி கட்டணம் மற்றும் நடைமுறை செலவுகளுக்கான கட்டணம் செலுத்த வேண்டும்’ என கூறியுள்ளார்.

இதை நம்பி பிரேம்குமார், 4 வெவ்வேறு வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சத்து 60 ஆயிரம் செலுத்தியுள்ளார். ஆனால், பிரேம்குமாருக்கு எந்த பரிசும் வரவில்லை.

சந்தேகம் அடைந்த அவர் தான் ஏற்கெனவே தொடர்பு கொண்டு பேசிய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரேம்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீஸில் புகார் செய்தார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT