சென்னை: நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வசந்தன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில், “திருமுல்லைவாயிலைச் சேர்ந்த ராஜகோபால், கப்பலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3.50 லட்சத்தை ஏமாற்றிவிட்டார்.
இதேபோல, பலரிடம் ரூ.2 கோடிக்கு மேல் ஏமாற்றியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.
இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி, ராஜகோபால், அவரது கூட்டாளி கோவிந்தராஜ் (28) ஆகியோரைக் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜகோபால் என்கிற பினுகுமரன் நாயர்(38), கப்பலில் வேலை வாங்கித் தருவதாக 2010 முதல் மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும், சிங்கப்பூர், அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியும், பல கோடி மோசடி செய்துள்ளார். தொடர்ந்து விசாரிக்கிறோம்” என்றனர்.