புதுக்கோட்டை: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூரைச் சேர்ந்தவர் செல்லையா மகன் சசிகுமார்(38).
இவர், கடந்த 2020-ல் மண்டையூரில் உள்ள மளிகைக் கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க வந்த 20 வயதுடைய ஒரு பெண்ணை, பாலியல் ரீதியாகதுன்புறுத்தி உள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் சசிகுமாரை கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நீதிபதி ஆர்.சத்யா நேற்று தீர்ப்பளித்தார்.
அதில், குற்றம் சாட்டப்பட்ட சசிகுமாருக்கு, பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
பெண்ணை மானபங்கப்படுத்திய குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். தண்டனைகளை தனித்தனியே அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, சசிகுமாரை திருச்சி மத்திய சிறைக்கு போலீஸார் அழைத்து சென்றனர். அரசுத் தரப்பில் வழக்கறிஞர் யோகமலர் ஆஜரானார்.