புதுச்சேரி: டிஜிபி பெயரில் மருத்துவரிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட முயற்சித்தது குறித்து சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள பாதர் சாகிப் வீதியில் வசிப்பவர் மருத்துவர் முருகேச பாரதி (53). இவர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடயவியல் துறையின் மருத்துவ இணை பேராசிரியராக இருந்து வருகிறார். இவரது செல்போனுக்கு, புதுச்சேரி டிஜிபி ரன்வீர்சிங் கிருஷ்ணியாவின் புகைப்படம் டிபியில் இடம்பெற்ற நிலையில், வாட்ஸ்அப் எண்ணில் இருந்து மெசேஜ் ஒன்று வந்துள்ளது.
அதில், ''நான் புதுச்சேரி டிஜிபி தற்போது அவசர மீட்டிங் ஒன்றில் இருக்கிறேன். அமேசான் கிஃப்ட் வவுச்சர் ஒன்று அவசரமாக தேவை. அதை உடனே ரீசார்ஜ் செய்து அனுப்பி வைக்கவும்'' என்று கூறப்பட்டிருந்தது. இதைப் பார்த்த மருத்துவர் முருகேச பாரதிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
உடனே இது குறித்து அவர் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸாரை தொடர்பு கொண்டு, மேற்கண்ட தகவல் டிஜிபி ரன்வீர்சிங் கிருஷ்ணியாவிடம் இருந்துதான் வந்துள்ளதா என்பதை ஆய்வு செய்து தெரிவிக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார், டிஜிபி அலுவலகத்தை தொடர்புகொண்டு இது பற்றிய தகவலை விசாரித்துள்ளனர்.
அதில் டிஜிபியிடம் இருந்து இதுபோன்ற எந்தவொரு தகவலும் யாருக்கும் அனுப்பப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து மருத்துவர் முருகேச பாரதியிடம், சைபர் க்ரைம் போலீஸார் தகவல் தெரிவித்த நிலையில் அவர் அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து அவர் டிஜிபி பெயரில் மோசடியில் ஈடுபட முயன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார்.
அதன்பேரில் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் மனோஜ் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் பதிவான எண்ணில் இருந்து இந்த வாட்ஸ்அப் மெசேஜ் வந்திருப்பது தெரியவந்துள்ளது. அதனைக்கொண்டு போலீஸார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.