க்ரைம்

திண்டுக்கல் | தந்தையை கார் ஏற்றி கொல்ல முயன்றபோது குழந்தை உயிரிழப்பு: இளைஞர் கைது

செய்திப்பிரிவு

முன்விரோதம் காரணமாக தந்தையை காரை ஏற்றிக் கொலை செய்ய முயன்றபோது உடன் இருந்த ஒன்றரை வயது மகள் உயிரிழந்தார். இது தொடர்பாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டி யார்சத்திரம் அருகே சில்வார் பட்டியைச் சேர்ந்த தொழிலாளி பொன்னுச்சாமி. இவரது ஒன்றரை வயது மகள் சாதனா. பொன்னுச்சாமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரனுக்கும் (34) முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் ராஜேந்திரன், பொன்னுச் சாமியை கொலை செய்துவிடுவேன் என மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பொன்னுச்சாமி அவரது மகள் சாதனாவுடன் இரு சக்கர வாகனத்தில் சில்வார்பட்டிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த ராஜேந்திரன், பொன்னுச்சாமியின் இரு சக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதினார். இதில் சாலையில் விழுந்து படுகாயமடைந்த சாதனா உயிரிழந்தார்.

இது குறித்து விசாரணை நடத்திய ரெட்டியார்சத்திரம் போலீஸார், முதலில் விபத்து என நினைத்தனர். ஆனால் தீவிர விசாரணையில் பொன்னுச் சாமிக்கும், ராஜேந்திரனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததும், பொன்னுச்சாமி மீது காரை ஏற்றிக் கொல்ல ராஜேந்திரன் முயன்றதும் தெரிய வந்தது. இதில் பொன்னுச்சாமி லேசான காயத்துடன் தப்பிவிட குழந்தை சாதனா உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து போலீஸார் கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT