சென்னை: மயிலாப்பூரில் ஆடிட்டர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்டு, 1000 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்தவர் தொழில் அதிபரான ஆடிட்டர் ஸ்ரீகாந்த் (60), அவரது மனைவி அனுராதா (55) இருவரும் அமெரிக்காவில் வசிக்கும் மகள் சுனந்தா மற்றும் மகன் சஸ்வத்தை பார்த்துவிட்டு 07.05.2022 அன்று அதிகாலை வீடு திரும்பினர். அதன் பிறகு அவர்கள் பற்றிய தகவல் தெரியவில்லை.
அதிர்ச்சி அடைந்த மகன் சஸ்வத் இதுகுறித்து சென்னை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி மயிலாப்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஸ்ரீகாந்த், அனுராதா இருவரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
கொலை தொடர்பாக அவர்களது கார் ஓட்டுநரான நேபாளத்தைச் சேர்ந்த பதம்லால் கிருஷ்ணா (45), அவரது கூட்டாளியான மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த ரவி (39) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், நகை, பணத்துக்காக ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவியை மைலாப்பூர் வீட்டில் வைத்து கொலை செய்து, வீட்டிலிருந்த நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்ததையும், பிரேதங்களை காரில் ஏற்றி, ஆடிட்டர் ஸ்ரீகாந்துக்கு சொந்தமான மகாபலிபுரம் அருகில் உள்ள பண்ணை வீட்டில் புதைத்ததையும் ஒப்புக் கொண்டனர்.
அவர்களிடமிருந்து ஸ்ரீகாந்த் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 1,000 பவுன் நகைகள், 50 கிலோ வெள்ளிப் பொருட்கள், 2 செல்போன்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மயிலாப்பூர் போலீஸார் பரிந்துரைத்தனர்.
இதை ஏற்ற காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கைதான பதம்லால் கிருஷ்ணா, ரவி இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவிட்டார். அதன்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.