சென்னை: சென்னை, கொளத்தூர், ராஜன் நகர், 1-வது பிரதான சாலையில் வசிப்பவர் சங்கீதா (30). இவர் கடந்த 6-ம் தேதி இரவு வீட்டை உட்புறம் தாழிட்டு தூங்கி மறுநாள் காலை கண் விழித்து பார்த்தபோது, வீட்டின் கதவு திறக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த வளையல், செயின், மோதிரம் உள்ளிட்ட 20 பவுன் நகைகள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த சங்கீதா இதுகுறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக சம்பவ இடத்தை சுற்றியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு நபர் வீட்டுக்குள் புகுந்து திருடியது தெரியவந்தது.
சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நபரின் உருவத்தை கொண்டு தீவிர விசாரணை செய்து, சங்கீதா வீட்டில் திருட்டில் ஈடுபட்டதாக கொளத்தூர், மக்காராம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(20) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 20 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்த கதவை, ஜன்னல் வழியாக கம்பியை விட்டு நூதன முறையில் திறந்து வீடு புகுந்து கைவரிசை காட்டியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. புகார் அளித்த 9 மணி நேரத்தில் போலீஸார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.