புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குப்பத்தில் கடன் தொல்லையால் மனைவி, 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பு பகிர்ந்த தகவல்: புதுச்சேரி பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (38). ஆட்டோ ஓட்டுநர். இவர் தனது மனைவி பச்சைவாழி (34) மற்றும் மகள் லட்சுமிதேவி (7) மகன் ஆகாஷ் (3) ஆகியோருடன் அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் தபால்காரர் வீதி செட்டிக்குளம் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், இன்று தியாகராஜன் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தெற்கு பகுதி போலீஸ் எஸ்பி விஷ்ணுகுமார், அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடன் தொல்லையால் மனமுடைந்த தியாகராஜன், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து அவர்கள் 3 பேரையும் கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரின் உடல்களையும் மீட்ட போலீஸார் பிரதேப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த அரியாங்குப்பம் போலீஸார் தொடர் விசாரணை நடத்தினர்.
இதில் தியாகராஜன் தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் நல்லவாடு சாலையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் வாடகை ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். மது குடிக்கும் பழக்கம் கொண்ட அவருக்கு கடன் தொல்லை என கூறப்படுகிறது. சுமார் 5 லட்ச ரூபாய்க்கு மேல் பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொடர்ந்து தியாகராஜனுக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதன் காரணமாக குடும்பத்தில் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
கடன் தொல்லையால் மனமுடைந்த தியாகராஜன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதனால் பூரணாங்குப்பத்தில் வசித்து வரும் தனது மனைவி பச்சைவாழியின் தாய் தேவகிக்கு போன் செய்து, வீட்டுக்கு வந்து எங்கள் அனைவரையும் அழைத்துச் செல்லுங்கள் என கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.
இதற்கிடையே மனைவி மற்றும் குழந்தைகளை விஷம் கொடுத்து தலையணையால் முகத்தை அமுக்கி, கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்தது என போலீஸார் தரப்பில் குறிப்பிட்டனர்.
முழுமையான விசாரணைக்கு பிறகே கடன் தொல்லையால் தியாகராஜன் இந்த முடிவை எடுத்தாரா அல்லது வேறு காரணமா என தெரிய வரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அரியாங்குப்பத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மனைவி, குழந்தைகளை கொன்று தற்கொலை செய்துகொண்ட தியாகராஜன் முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் உறவினர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
| தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வாகாது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். |