திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பூங்கா ஒன்றில் கடந்த திங்கட்கிழமை இரு சிறுமிகளிடம் மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என்று புகார் அளிக்கப்பட்டது. இதனை போளீஸார் சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் ஸ்ரீஜித் இன்று கைது செய்யப்பட்டார்
ஸ்ரீஜித் மலையாள சினிமாவின் பழம்பெரும் நடிகர் டிஜி ரவியின் மகன் ஆவார். 47 வயதான ஸ்ரீஜித் மலையாளத்தில் வில்லன் கதாபாத்திரங்களிலும், குணசித்திர பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். ஸ்ரீஜித் 60-க்கும் மேற்பட்ட மலையாள படங்களிலும், சில தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
ஸ்ரீஜித் போக்சோ வழக்கில் கைது செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த 2016-ஆம் ஆண்டு பள்ளிச் சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற புகாரில் அவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், மீண்டும் போக்சோவில் ஸ்ரீஜித் கைது செய்யப்பட்டிருக்கிறார்.