வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த குப்பத்தாமோட்டூர் நடுத் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (21). இவர், வேலூரில் ஆர்த்தோ டெக்னீசியன் படித்து வருகிறார். அதே தெருவைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவி ஒருவர் காரை கூட்டுச்சாலையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
ஒரே தெருவில் இருவரும் வசிப்பதால் கடந்த 4 ஆண்டுகளாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அந்த மாணவி சதீஷ் குமாருடன் பேசுவதை தவிர்த்து விட்டு, வேறு ஒருவருடன் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த சதீஷ்குமார் மாணவியை கண்டித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக திருவலம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ்குமார், மாணவியிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், மனமுடைந்த மாணவி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஆனால், அவரை விடாமல் விரட்டிச்சென்ற சதீஷ்குமார் திருவலம் காவல் நிலையம் அருகே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை குத்தினார். இதில் படுகாயமடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
இது குறித்த தகவலறிந்த திருவலம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனை யில் அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத் துவமனைக்கு மாறறப்பட்டார். இதுதொடர்பாக திருவலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.