திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் மலை கிராம காவல் நிலையத்தின் தனிப்பிரிவு தலைமை காவலராக கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் விஜய் (42). இவர், மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் வாணாபுரம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, வாணாபுரம் காவல் நிலையத்தின் தனிப்பிரிவு தலைமை காவலராக நேற்று பொறுப்பேற்ற நிலையில், ஜமுனாமரத்தூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் (35) என்பவரிடம் இருந்து ரூ.15 ஆயிரம் லஞ்சப் பணத்தை காவல் நிலையம் முன்பாக வாங்கியபோது திருவண் ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன், காவல் ஆய்வாளர் பிரபு மற்றும் காவலர்கள் கோபிநாத், முருகன், சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று கைது செய்தனர்.
இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தின் தனிப்பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வந்த விஜய், செம்மரம் கடத்தும் கும்பல், செம்மரம் வெட்டச் செல்லும் கும்பலுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் நபர்கள், சாராயம் காய்ச்சுபவர்கள் என பட்டியல் போட்டு பல ஆண்டுகளாக லஞ்சப் பணம் வசூலித்து வந்துள்ளார்.
பணம் கொடுக்காதவர்கள் மீது சிறப்பு அறிக்கை என்ற பெயரில் மாவட்ட தனிப்பிரிவு வழியாக காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பி கைது செய்து நடவடிக்கை எடுத்து வந்துள்ளார். இதனால், மலை கிராமங்களில் பல்வேறு முறைகேடு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் இவருக்கு லஞ்சப் பணத்தை தயங்காமல் கொடுத்து வந்தனர். நாளடைவில் இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் சென்றாலும் மாவட்ட தனிப்பிரிவில் உள்ள அதிகாரிகளை சரி கட்டி வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு புதிய காவல் கண்காணிப்பாளர் வந்த பிறகு மீண்டும் புகார்கள் அதிகம் வந்துள்ளன. அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரை காப்பாற்றும் நோக்கில் ஜமுனாமரத்தூரில் இருந்து வாணாபுரம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலராக இடமாற்றம் செய்துள்ளனர். ஜமுனாமரத்தூரில் ரூ.40 லட்சம் மதிப்பில் 8 ஆயிரம் சதுரடி பரப்பளவு கொண்ட இடத்தை சமீபத்தில் வாங்கியுள்ளார்.
ஜமுனாமரத்தூர் அடுத்த சிந்தாலூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி கோவிந்தராஜ் (35) என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். கடந்த வாரம் அவரது செங்கல் சூளைக்கு ஒரு மர்ம கும்பல் காரில் வந்து சென்றுள்ளது.
இதை தெரிந்துகொண்ட விஜய், கோவிந்தராஜிடம் விசாரிக்க சென்றுள்ளார். அப்போது, காரில் வந்தவர்கள் யாரென தெரியாது என கோவிந்தராஜ் கூறவே, அவரை விஜய் தாக்கியுள்ளார். பின்னர், வந்து சென்றவர்கள் யார் என்று கூறாவிட்டால் செம்மரம் கடத்தும் தொழில் செய்கிறாய் என்று கூறி உள்ளே தள்ளிவிடுவேன் எனமிரட்டியதுடன் ரூ.1 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அவ்வளது பணம் இல்லை என கூறியவரிடம் பேரத்தின் முடிவில் ரூ.15 ஆயிரம் பணம் கொடுக்க கோவிந்தராஜ் சம்மதித்துள்ளார்.
இதற்கிடையில், அவர் வாணாபுரம் காவல் நிலைய பணிக்கு சென்றாலும் பணத்தை கொடுக்காவிட்டால் சிறைக்கு அனுப்பி விடுவேன் என்று கோவிந்தராஜை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். அந்த பணத்தை காவல் நிலையம் முன்பாக வாங்கிய போது கைது செய்யப்பட்டார்’’ என தெரிவித்தனர்.