சென்னை: வேளச்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அடுத்தடுத்து 10 பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை, வேளச்சேரி, சக்தி விஜயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் அருணாதேவி (59). இவர் கடந்த மாதம் 17-ம் தேதி இரவு வேளச்சேரி, 100 அடி சாலையில் உள்ள ஓட்டலுக்கு உணவு வாங்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கும்பல் அருணாதேவி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றது.
இதுகுறித்து அருணாதேவி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து துப்பு துலக்கினர்.
இதில், அருணாதேவியிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டது சென்னை கண்ணகி நகர் ஜான்பாஷா (31), அவரது கூட்டாளிகள் நீலாங்கரை ஹக்கீம் (24), சந்தோஷ்குமார் (22), கண்ணகி நகர் விஜயகுமார் (30) என்பது தெரிந்தது. இதையடுத்து நகை பறிப்பில் ஈடுபட்ட 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட 4 பேரும் வேளச்சேரி, புனித தோமையார்மலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம் மற்றும் பல்லாவரம் ஆகிய காவல் நிலைய எல்லைகளில் நடந்து சென்ற பெண்களை குறிவைத்து நகைகளை பறித்துச் சென்றது தொடர்பான 10 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 35 பவுன் நகைகள் மற்றும் ஓர் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் ஜான்பாஷா மீது ஒரு கொலை வழக்கு உட்பட 18 குற்ற வழக்குகள் மற்றும் ஹக்கீம் மீது 5 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்ததாக போலீஸார் கூறினர்.