கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் நகை வியாபாரி மோகன்ராஜ் (42). இவருக்கு தொழில் ரீதியாக பழக்கமான அசோக்குமார் (38) என்பவர், கடந்த 18-ம் தேதி மோகன்ராஜை அலைபேசியில் தொடர்புகொண்டு, “நான் ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் உள்ள ஒரு வங்கியில் நகை அடகு வைத்துள்ளேன்.
அதனை மீட்டெடுக்க ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் நகையை மீட்டு பணத்தை திரும்ப கொடுத்து விடுகிறேன்” என தெரிவித்துள்ளார். இதனை நம்பிய மோகன்ராஜ், அசோக்குமாரிடம் ஒரு லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். அதற்கு பிறகு மோகன்ராஜால் அவரைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை. அலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
சம்பவம் குறித்து மோகன்ராஜ் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரைத் தேடி வந்தனர். விசாரணையில், காந்திபுரத்தை சேர்ந்த பழனிவேல் என்ற நகை வியாபாரியிடம் ரூ.3.5 லட்சம், ஒத்தக்கால்மண்டபத்தை சேர்ந்த மணிகண்டன் (40) என்ற நகை வியாபாரியிடம் ரூ.3 லட்சம் பணத்தை அசோக்குமார் வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும், அவர் பல நகை வியாபாரிகளிடம் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் கோவையில் அசோக்குமாரை கைது செய்தனர்.
மதுரை திருமங்கலத்தை சேர்ந்த அவர், பழைய நகைகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் பழகி மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.