க்ரைம்

கூடலூர் | மான் வேட்டையாடிய 4 பேர் கைது - துப்பாக்கி, இறைச்சி பறிமுதல்

செய்திப்பிரிவு

நாடுகாணி பகுதியில் மான்வேட்டையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து துப்பாக்கி, குண்டுகள் மற்றும் மான் இறைச்சி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்டது தேவாலா பகுதி. இங்குள்ள வனப்பகுதியில் சிலர், விலங்கு களை வேட்டையாடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் உத்தரவின்போரில், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திருகேஸ்வரன், பிரதீப்குமார், தலைமை காவலர்கள் ராதாகிருஷ்ணன், சுரேஷ், காவலர்கள் பிரபாகரன், பழனிசாமி, மணி,ஊர்காவல் படையைச் சேர்ந்த சத்யராஜ், யோகேஸ்வரன் ஆகியோர் அடங்கிய தனிப்பிரிவினர் நாடுகாணி, பால்மேடு ஆகிய வனப்பகுதியில் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கையில் துப்பாக்கி, குண்டுகள் மற்றும் இரண்டு பை முழுவதும் மான் இறைச்சி இருந்தது தெரியவந்தது. வேட்டையில் ஈடுபட்டவர்கள் நாடுகாணி பால்மேடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (38), பெரிய சூண்டியை சேர்ந்த மைக்கேல்(30), புஷ்பராஜ் (33), அருண் (26) என்பதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்து, துப்பாக்கி, குண்டுகள், டார்ச் லைட்கள், செல்போன்கள் மற்றும் மான் இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT