க்ரைம்

உதகை அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு: தனியார் தங்கும் விடுதிக்கு ‘சீல்’

செய்திப்பிரிவு

உதகை அருகே கல்லட்டி மலைப்பாதையில் நிகழ்ந்த விபத்தில் ஐடி ஊழியர் உயிரிழந்தார். இதுதொடர்பாக சுற்றுலா வாகனத்தைஅழைத்துச்சென்ற தனியார் விடுதி உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து கல்லட்டி வழியாக கூடலூர் செல்லும் மலைப்பாதை ஆபத்தான கொண்டைஊசி வளைவுகளைகொண்டது என்பதால், சுற்றுலாவாகனங்கள் செல்ல காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர். தலைக்குந்தா பகுதியில் காவல் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு சுமார் 10 மணியளவில், கல்லட்டி மலைப்பாதையில் அமைந்துள்ள தங்கும் விடுதியின் உரிமையாளர் வினோத்குமார், உதவியாளர் ஜோசப் ஆகிய இருவரும், காவல்துறையினருக்கு தெரியாமல் வேறொரு குறுக்குப் பாதையில் சென்று, கல்லட்டி மலைப்பாதை வழியாக டெம்போ டிராவலர் வாகனத்தை அழைத்துச் சென்றனர். அந்த வாகனத்தில் சென்னையை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர்களான 4 பெண்கள் உட்பட 18 பேர் இருந்துள்ளனர்.

15-வது கொண்டை ஊசி வளைவில் வாகனம் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்த தகவல் அறிந்து உதகை நகர டிஎஸ்பி மகேஸ்வரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, மக்களுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில், திருநெல்வேலியை சேர்ந்த பெண் ஐடி ஊழியர் முத்துமாரி (24), சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பத்ரி (24), கார்த்திக் (24), அஜ்மல் (28), தேஜஸ் (28) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காயமடைந்த ஓட்டுநர் காசிம் (45) உள்ளிட்டோர், உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக, புதுமந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இந்நிலையில், தடை செய்யப்பட்ட சாலையில் விதி மீறி வாகனத்தை அழைத்துச் சென்ற தங்கும் விடுதி உரிமையாளர் வினோத்குமார் (25), அவரது உதவியாளர் ஜோசப் (26) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

கல்லட்டியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், உதகை கோட்டாட்சியர் துரைசாமி தலைமையில் வருவாய் துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டு ‘சீல்’ வைத்தனர்.

SCROLL FOR NEXT