மதுரையில் பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளையடிப்பதற்காக ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 இளைஞர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
மதுரை வண்டியூர் பகுதி சங்கு நகரில் சிலர் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், அண்ணா நகர் காவல் உதவி ஆணையர் சூரக்குமார் தலைமையில், தனிப் படையினர் அப்பகுதியை கண்காணித்தனர். நேற்று முன்தினம் இரவு சந்தேகத்துக்கிடமாக, அப்பகுதியில் சுற்றித் திரிந்த 5 பேரை பிடித்தனர்.
அவர்களிடம் மிளகாய் பொடி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. விசாரணையில் அவர்கள் மதுரை பாலாஜி நகர் அஜய்(20), செங்கல்பட்டு மாவட்டம், மாத்தூரைச் சேர்ந்த ஜெகன்(24), சென்டிவாக்கம் மனோஜ்(30), சென்னை மதுராந்தகம் இந்திரா நகர் லோகேஷ்வரன்(20), மதுரை கான்பாளையம் பிரேம்குமார்(19) எனத் தெரிய வந்தது.
வண்டியூர் பகுதியில் பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளையடிக்கும் நோக்கில் அஜய், பிரேம்குமார் கொடுத்த தகவலின்பேரில் 3 பேரும் வரவழைக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீஸார் கைதுசெய்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.