மேற்கு மண்டல மாவட்டங்களில் கஞ்சா வியாபாரிகளின் 198 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
கோவை மேற்கு மண்டல காவல்துறையில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்கள் உள்ளன. இங்குகஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையைத் தடுக்க,மேற்குமண்டல காவல்துறைதலைவர் சுதாகரின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் சோதனை பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளை முடக்கும் பணியிலும் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மேற்கு மண்டல காவல்துறையினர் கூறும்போது,‘‘மேற்கு மண்டலத்தின் 8 மாவட்டங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 557 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 560-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கோவையில் 180 வழக்குகள், ஈரோட்டில் 113 வழக்குகள், நீலகிரியில் 43 வழக்குகள், திருப்பூரில் 77 வழக்குகள், சேலத்தில் 41 வழக்குகள், நாமக்கல்லில் 29 வழக்குகள், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் தலா 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கோவை மாவட்ட காவல்துறையில் 34 வங்கிக் கணக்குகள், ஈரோடு மாவட்டத்தில் 42, நீலகிரியில் 7, திருப்பூரில் 27, சேலத்தில் 24, நாமக்கல்லில் 13, தருமபுரியில் 24, கிருஷ்ணகிரியில் 27 என மொத்தம் 198 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வங்கிக் கணக்குகளையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.