க்ரைம்

தலைஞாயிறு அருகே கார் மோதி சாலையோரம் நடந்து சென்ற பாட்டி, பேத்தி உயிரிழப்பு; ஓட்டுநர் கைது

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: தலைஞாயிறு அருகே சாலையோரம் நடந்துசென்ற பாட்டி, பேத்தி மீது கார் மோதியதில், இருவரும் உயிரிழந்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தலைஞாயிறு ஒன்றியம் நீர்முளை கடைத் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் குத்தூஸ். இவரது தாயார் பாத்திமா பீவி(71). அப்துல் குத்தூஸின் மகள் நூரா பாத்திமா(12).

இந்நிலையில், பாத்திமா பீவி, தனது பேத்தி நூரா பாத்திமாவுடன் நேற்று முன்தினம் இரவு நீர்முளை கடைத் தெருவில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற ஒரு கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, நீர்முளை கடைத் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.

தொடர்ந்து, தாறுமாறாக ஓடிய கார் சாலையோரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த பாத்திமா பீவி, நூரா பாத்திமா ஆகியோர் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த பாத்திமா பீவி, நூரா பாத்திமா ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்த தலைஞாயிறு போலீஸார் அங்கு சென்று, இருவரின் சடலங்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, எஸ்.பி சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக, தலைஞாயிறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான வாய்மேட்டை அடுத்த ராஜன்கட்டளை பகுதியைச் சேர்ந்த லட்சுமணன்(40) என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT