க்ரைம்

தங்கப் புதையல் இருப்பதாக போலி நகைகளை கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: பெண் உட்பட மூவர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

கோவை: தங்கப் புதையல் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் உட்பட மூவர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் மண்ணரையைச் சேர்ந்தவர் பாலு(45). உணவகம் நடத்தி வருகிறார். இவர், கோவை காட்டூர் போலீஸில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த மாதம் 15-ம் தேதி எனது உணவகத்துக்கு வந்த 3 பேர், கோவையில் மேம்பாலம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

மேம்பாலப் பணிக்காக குழி தோண்டும்போது ஒரு சிறிய குடுவையில் தங்க நகைகள் இருந்த புதையல் கிடைத்தது. அதை குறைந்த விலைக்கு விற்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறிய அவர்கள் ஒரு தங்க நகையை காட்டினர். அதை நான் பரிசோதித்த போது, அசல் தங்கம் எனத் தெரியவந்தது.

அவர்கள் தங்களிடம் ரூ.80 லட்சம் மதிப்பில் ஒன்றே முக்கால் கிலோ தங்க நகைகள் இருப்பதாகவும், ரூ.5 லட்சம் கொடுத்தால் விற்று விடுவதாகவும் கூறினர். அவற்றை வாங்க சம்மதித்த நான், கடந்த 20-ம் தேதி கோவை நஞ்சப்பா சாலையில் ஓரிடத்தில் அவர்களை சந்தித்து, ரூ.5 லட்சம் தொகையை கொடுத்தேன்.

அவர்கள் தங்க நகைகள் இருந்த பையை அளித்தனர். பின்னர், திருப்பூருக்கு சென்று நான் நகைகளை பரிசோதித்தபோது, அவை தங்க முலாம் பூசப்பட்ட நகைகள் எனத் தெரியவந்தது. மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இதையடுத்து, ரோகித், கிரண்குமார் மற்றும் பெண் ஒருவர் என 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT