செங்கல்பட்டு: செங்கல்பட்டு கால் டாக்ஸி ஓட்டுநர் கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடிப்பதற்காக ஓட்டுநரை கொன்றுவிட்டு காரை கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சோழிங்கநல்லூரை அடுத்த அரசன்கழனியைச் சேர்ந்தவர் அர்ஜுன் (30). தனியார் நிறுவன கால் டாக்ஸி ஓட்டுநரான இவர், நேற்று முன்தினம் வல்லம் அருகே கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிந்த செங்கல்பட்டு தாலுகா போலீஸார் 5 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கார் புக்கிங் செய்த செல்போன் எண்ணை வைத்து குற்றவாளிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான பெரம்பலூர் மாவட்டம் கரியனூரைச் சேர்ந்த பிரசாத் என்பவர் தனது ஊர்க்காரர்களான திருமூர்த்தி, கட்டிமுத்து ஆகியோருடன் சேர்ந்து விழுப்புரம் அருகே உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க திட்டம் தீட்டியுள்ளார். கொள்ளையடித்து விட்டு தப்பித்துச் செல்ல இவர்களுக்கு கார் தேவைப்பட்டதால் தாம்பரம் மெப்ஸ்ஸில் இருந்தபடி தனியார் கால் டாக்ஸி கார் புக் செய்துள்ளனர்.
அப்போது வந்த அர்ஜுன் காரில் பயணித்துள்ளனர். செங்கல்பட்டு வந்ததும் காரை விட்டுவிட்டு இறங்கி ஓடுமாறு கூறியுள்ளனர். இதில் இருதரப்பும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அர்ஜுனை கொலை செய்துவிட்டு காரை திருடி தப்பி உள்ளனர்.
பின்னர் அந்த காரை மேல்மருவத்தூர் அருகே நிறுத்திவிட்டு பேருந்தில் ஏறி 5 பேரும் தங்களது ஊரில் இருந்துள்ளனர். தனிப்படை போலீஸார் அங்கு விரைந்து 3 கைது செய்தனர். தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.
இதனிடையே ஓட்டுநர் கொலையில் அவரது குடும்பத்துக்கு இழப்பீடு கோரி கால் டாக்ஸி ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் செங்கை மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.