க்ரைம்

பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: கிராம நிர்வாக அலுவலர் மீது வழக்குப்பதிவு

செய்திப்பிரிவு

கடலூர்: கடலூர் கே.கே.நகரைச் சேர்ந்தவர் இளையராஜா (43). இவர் கடலூர் வட்டம் சேடப்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். வேறு ஒரு பகுதியில் வசிக்கும் திருமணமான 28 வயது பெண் ஒருவர் சேடப்பாளையம் பகுதியில் நிலம் வாங்கியுள்ளார்.

இந்த நிலத்திற்கான பட்டா பெயர் மாற்றத்திற்காக அவர், கிராம நிர்வாக அலுவலர் இளையராஜாவை அணுகிய போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், அரசு போட்டித் தேர்விற்கு தயாராகி வரும் அப்பெண் சென்னைக்கு சென்றிருந்த நிலையில், சென்னையில் அப்பெண்ணை சந்தித்த இளையராஜா தன்னிடம் போட்டித் தேர்விற்குத் தேவையான புத்தகங்கள் இருப்பதாகக் கூறி மகாபலிபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு தங்கும் விடுதியில் அறை எடுத்து அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது, அப்பெண்ணுடன் இருப்பது போன்ற புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி, மற்றொரு நாளிலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து அப்பெண் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT