க்ரைம்

திருச்சி | பெண் காவலர் தற்கொலை முயற்சி: ரயில்வே ஊழியர் கைது

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் பெண் காவலராக பணிபுரிந்து வரும் ஒருவரின் கணவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதையடுத்து, லால்குடி திருமணமேடு பகுதியிலுள்ள வளவனூரைச் சேர்ந்த உறவினரும், ரயில்வே ஊழியருமான ஸ்டாலின்(40) என்பவருடன் பெண் காவலர் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், பெண் காவலர் ஆடையின்றி இருந்த புகைப்படங்களை செல்போனில் எடுத்து வைத்துக் கொண்ட ஸ்டாலின், அதைக்காட்டி மிரட்டி பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

மேலும் ரூ.20 ஆயிரம் பணத்தையும் பெற்றுக்கொண்ட ஸ்டாலின், பெண் காவலரின் நிர்வாணப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த பெண் காவலர், ஜூன் 20-ம் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பெண் காவலர் அளித்த புகாரின்பேரில், கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரயில்வே ஊழியர் ஸ்டாலினை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT