சென்னை: சென்னை கோபாலபுரம், டிஏவி பள்ளி அருகே கடந்த 15-ம் தேதி நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்மணியின் செல்போனை, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு பெண் உள்ளிட்ட இருவர் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
மேலும், 19-ம் தேதி அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த 62 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் செல்போனும் இதேபோல் பறிக்கப்பட்டது. இதுகுறித்து ராயப்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
முதல்கட்டமாக ராயப்பேட்டை உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் சம்பவங்கள் நடைபெற்ற இடங்களின் அருகிலுள்ள சுமார் 42 சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் தேனாம்பேட்டையைச் சேர்ந்த விவேக்(26), மெரினா காமராஜர் சாலை ஜெகன்(25), சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெகதீசன்(24), தூத்துக்குடி சரவண பெருமாள்(19) மற்றும் 16 வயதுடைய சிறுமி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் சிறுமியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுமி வெளியிடும் சங்கேத வார்த்தைகளுக்கேற்ப குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து, பின்னர் இருசக்கர வாகனங்களில் சென்று ராயப்பேட்டை, அபிராமபுரம், ஆயிரம் விளக்கு, கிண்டி, கோட்டூர்புரம், வேளச்சேரி, எழும்பூர், நுங்கம்பாக்கம், அண்ணாசாலை ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து 16 பேரிடம் செல்போன்களை பறித்துள்ளனர். இதற்கு மூளையாக சிறுமி இருந்துள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.